Dinaithal - தினஇதழ்

நதிகளை இணைத்தால் வெள்ளப்பெருக்கை தடுக்கலாம் - அப்துல் கலாம்

நாட்டில் வெள்ளப்பெருக்கைத் தடுக்க நதிகளை இணைக்க வேண்டும், இது சாத்தியம் தான் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.


சென்னை தியாகராய நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் பவள விழாவில் பங்கேற்ற அப்துல் கலாம் மாணவிகள் மத்தியில் பேசுகையில், இங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது எங்கள் வீட்டில் நூலகம் அமைப்பேன். தினமும் ஒரு மணி நேரம் ஏதாவது புத்தகத்தை படித்து அறிவை பெருக்கிக் கொள்வேன் என்று நீங்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.


இந்த நூலகத்தை குறைந்தபட்சம் 500 புத்தகங்கள் கொண்ட நூலகமாக மாற்றுவதை அவர்களுடைய பெற்றோர் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். இந்த வீட்டு நூலகத்தில் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணி நேரமாவது செலவிட வேண்டும். வரும் 2020ம் ஆண்டில் பொருளாதாராத்தில் உலகிலேயே வளர்ந்த நாடாக இந்தியா மாறும். சமீபத்தில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடியால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டன. இதில் இந்த வீழ்ச்சியிலிருந்து இந்தியா விரைந்து எழுந்து காட்டியது.


பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, பல்வேறு சிறந்த திட்டங்கள் மூலம் குறுகிய காலத்தில் மீண்டும் 7 சதவீதத்தை எட்டியது. இப்போது இது 8.5 சதவீதத்தை எட்டிப்பிடித்துள்ளது. இந்த வளர்ச்சி விரைவில் 10 சதவீதத்தை எட்டும். நம்மால் அதை எட்டிக்காட்ட முடியும். இதற்கு வேளாண்மை, கல்வி, தகவல் தொழில்நுட்பம், மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் நாம் தன்னிறைவு பெறவேண்டும்.


உலக வெப்பமயமாவதைத் தடுக்கும் வகையில் மாணவர்கள் ஒவ்வொருவரும் 10 மரங்கள் நடுவதை குறிக்கோளாக கொண்டு, அந்த மரங்கள் நன்கு வளர்வதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து மாணவிகளுடன், அப்துல் கலாம் கலந்துரையாடினார். மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது நதிகள் இணைப்பு சாத்தியமா? என்று ஒரு மாணவி கேட்க, பதிலளித்த கலாம்,


இந்திய அளவில் நதிகளை இணைக்க முடியாவிட்டாலும் மாநில அளவிலாவது நதிகளை இணைக்க முடியும். இது சாத்தியம். கோவாவில் இணைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் நதிகளை இணைந்தால் வெள்ள அபாயத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதனுடன் குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் தூர்வாரப்பட வேண்டும் என்றார்.


நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் மற்றும் எரிபொருளை மிச்சப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் ஒரு பகுதியாக வீடுகளின் சிறு தேவைகளுக்காக ஒவ்வொரு வீட்டுக்கும் சூரியனிலிருந்து மின்சாரம் தயாரிக்க உதவும் சோலார் பேனல்களை அரசே இலவசமாக அளிக்கலாம் என்றார் கலாம்.


நதிகள் இணைப்பு சாத்தியமில்லை என்று ராகுல்காந்தி என்ற 'மாபெரும் விஞ்ஞானி' கூறிவிட்டதால் அதையே பிடித்துக்கொண்டு இந்தத் திட்டத்தையே மத்திய அரசு கைவிட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்சாலை பொறியியல் தொடர்பான கருத்தரங்கை அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.


அப்போது ஒரு நிருபர் (2012 படத்தைப் பார்த்து மிகவும் பயந்துவிட்டார் போல) 2012ல் உலகம் அழியுமா? என்றார். இதைக்கேட்டு சிரித்த கலாம், பயப்படாதீங்க. உலகம் இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்திய விஞ்ஞானிகள் மிகச்சிறந்தவர்கள். நம்முடைய நாட்டிலேயே அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு தேவையான வசதிகள் உள்ளன. எனவே, வெளிநாடுகளுக்கு சென்றுதான் ஆய்வில் ஈடுபட்டால்தான் நோபல் பரிசு கிடைக்கும் என்று கூற முடியாது. எதிர்காலத்தில் நமது விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்றார்.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?