Dinaithal - தினஇதழ்

தேர்தல் தோல்வி குறித்து அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார் ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருப்பதாவது

தேர்தல் தோல்வி குறித்து அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார்  ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருப்பதாவது

தேர்தல் தோல்வி குறித்து அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார் ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருப்பதாவது

நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கூடங்களும் அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார், தனது தேர்தல் தோல்வி குறித்து, 'குப்பைத் தொட்டியும், சப்பைக் கட்டும்' என்ற தலைப்பில் தமது ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருப்பதாவது:

"கூடங்குளம் அணுமின் திட்டத்தை நம் மீது திணித்து வந்த காங்கிரசை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி எறிவோம் என்று கடந்த மூன்று ஆண்டுகளாகப் பேசிவந்தேன். அனைவருமாக சேர்ந்து அப்படியே செய்தும் விட்டோம். பிரச்சினை என்னவென்றால், சில அந்நிய சக்திகள் சதி செய்து என்னையும் அதற்குள் தள்ளி விட்டார்கள். சே, இந்த இந்திய வாக்காளர்கள் ஈவு இரக்கமற்றவர்கள். ஐடியா கொடுத்தவனையுமா அடித்து உள்ளே தள்ளுவது?

வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் பார்த்தால் நெருக்கமான நண்பர்கள் ஏராளமானோர் விழுந்து கிடந்தார்கள். “அண்ணாச்சி, என்னாச்சி, உங்களைப் பார்த்து அநேக நாளாச்சி” என்று ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொண்டோம். “அம்மாவை”த் தவிர ஒட்டு மொத்த அரசியல் குடும்பத்தையும் அங்கே பார்த்ததில் பெருமகிழ்ச்சி; நான் மட்டும் தூக்கி எறியப்படவில்லை என்பதில் ஒருவித திருப்தி.

துக்கம் விசாரிப்பதற்காக ஏராளமானோர் கடந்த மூன்று நாட்களாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். தொலைபேசியிலும் ஏராளமான இரங்கற் செய்திகள். திட்டும் உரிமையுடைய அல்லது திட்டுவதற்கான வாய்ப்பை நழுவவிட விரும்பாத சிலர் “உனக்கெதற்கு இந்த வேலையெல்லாம்?” என்று திட்டவும் செய்தனர். அரசியலுக்கென்று வந்துவிட்டால், இதையெல்லாம் பார்க்க முடியுமா, என்ன? நமக்குத் தொழில் திட்டுவதும், திட்டுவோருக்கு பதில் சொல்வதும்தானே?

ஒருசில ஆசாமிகள் “’அம்மா ஆத்மி’ என்று கட்சியின் பெயரை மாற்றிவிட்டு, பிழைப்பைப் பார்!” என்று அறிவுரைத்தார்கள். வேறு சிலர் குப்பைத் தொட்டிக்குள்ளிருந்து தப்பிக்கும் வழிமுறைகளைச் சொன்னார்கள். நீண்ட காலமாக அங்கேயே வசிப்பவர்கள் என்று நினைக்கிறேன்.

இத்தனைத் தொந்திரவுகளையும் தாங்கிக் கொண்டு, கடந்த மூன்றாண்டுகளில் முதன்முறையாக மூன்று நாட்கள் நிறைய தூங்கினேன். மார்ச் 29 அன்று இடிந்தகரையிலிருந்து வெளியே வந்ததும், வேட்பாளர் மனு தாக்கல் செய்தேன். பிறகு என்னை யாரும் தூங்க விடவில்லை. ஏப்ரல் 25 அன்று தேர்தல் முடிந்த பிறகு, தூக்கம் வரவில்லை. மே 16 அன்று முடிவு தெரிந்த பிறகு, தூக்கம் போகவில்லை.

இந்த தொடர் தூக்கத்திற்கிடையேயும், சங்க பரிவார் “சகோதரர்”களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்து ஒரு செயல்திட்டக் கட்டுரை எழுதினேன். சில நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறன். அவர்கள் கருத்துக்களை அறிந்தபிறகு, விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போது ஒருசில எண்ணங்கள்:

[1] ரூ.2௦௦ முதல் ரூ.1௦௦௦ வரை கையூட்டு வாங்கிக் கொண்டு வாக்களித்த வாக்காளப் பெருமக்களைப் போலல்லாமல், இவனிடமிருந்து ஒரு பைசாவுக்குக்கூட பிரயோசனம் கிடையாது என்று தெரிந்தும், எனக்கு வாக்களித்த சுமார் 15,5௦௦ வாக்காள பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பணம், நேரம், ஆள்பலம், அனுபவம் எதுவுமில்லாத நிலையிலும், எனது சாதி, மதம் எதையும் கணக்கிலெடுக்காது, வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்ளும் வரலாறு படைத்து விட்டீர்கள்.

[2] இப்படி ஒரு பெரிய வரலாற்று குப்பைத் தொட்டி விபத்து நடக்கப் போகிறது என்று தெரியாமலே, எனக்கு பண உதவியும், பல உதவிகளும் செய்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது நன்றியும், வணக்கங்களும்!

[3] எனது தேர்தல் வரவு-செலவு விபரங்களை விரைவில் அறியத் தருகிறேன். ஒரு நண்பர் குழு அதனை தயாரித்துக் கொண்டிருக்கிறது.

[4] தமிழக எளிய மக்கள் (ஆம் ஆத்மி) கட்சிக்குள் ஒரு சில வலிய மக்கள் வலிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அது முடியும்போது (முடிந்தால்?), என்ன நடக்கிறது என்று சொல்கிறேன்.

[5] கூடங்குளம் அணுஉலைப் பிரச்சினை தொடர்பாக திரு. அச்சுதானந்தன், திருவனந்தபுரம் பேராயர் சூசைபாக்கியம் போன்றோரை நண்பர்களுடன் சந்தித்துப் பேசினேன். இன்னும் ஏராளமானோரை பார்த்துப் பேசும் திட்டமிருக்கிறது. மோடி, லேடி, டாடி – இவர்களையும் பார்ப்போமே?

[6] உலகிலேயே உன்னதமான, உயர்வான, ஒப்பற்ற கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மே 14 அன்று ஒரு (சின்ன!) விபத்து நடந்தது. பலருடைய கதி என்ன ஆயிற்று என்றே தெரியவில்லையாம். “ஊ...” என்று துவக்கத்தில் கத்திய சில ஊடகங்கள் இப்போது “கம்”மென்று இருக்கிறார்கள். அங்கேயும் பண நாயகமோ? வாழ்க பண நாயகம்!

[7] “ஈழத் தமிழருக்கு இனப்படுகொலை, இங்குள்ள தமிழருக்கு கூடங்குளம் அணு உலையா?” என்று கேட்டு நாகர்கோவிலில் மே 17 அன்று ஒரு நிகழ்வுக்கு அனுமதி கோரியிருந்தோம். உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு அனுமதி மறுத்துவிட்டது. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் ராஜபக்ஷே குடும்பத்தையும், கூடங்குளம் அணு உலையையும் கொண்டு சேர்க்கும் வரை, நாம் உறங்கக் கூடாது தோழர்களே...!". இவ்வாறு அதில் அவர் எழுதியுள்ளார்.

English summary

subha udhayakumar writes in fb about his election defeat
 

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us