Dinaithal - தினஇதழ்

அனைத்துக்கட்சி கூட்டம் அர்த்தமற்றதா?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கடும் கண்டனம்

அனைத்துக்கட்சி கூட்டம் அர்த்தமற்றதா?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கடும் கண்டனம்

சென்னை :காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கு திமுக., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து ஒன்றுபட்டு ஒரே கருத்தைத் தெரிவித்தால் அது தமிழக முதல்வருக்கு வலு சேர்ப்பதாகத்தானே அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியதை கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்பது அர்த்தமற்ற செயல் என்று ஜெயலலிதா கூறியதை குறிப்பிட்டுள்ள கருணாநிதி, அப்படியானால், சித்தராமைய்யாவின் செயல் அர்த்தமற்றதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இதுதொடர்பான ஜெயலலிதாவின் அறிக்கையில், தன்னைப் பற்றி கடுமையாக விமர்சித்ததைக் கண்டித்துள்ள கருணாநிதி, காவிரி நதிநீர் தொடர்பான வழக்கை திமுக அரசு திரும்பப் பெற்றதற்கு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியின் ஆலோசனையே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மறுப்பதன் மூலம், தனக்கு மிஞ்சி எதுவும் இல்லை, தனக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்ற எண்ணத்தோடு ஜெயலலிதா செயல்படுகிறாரா என்பதை தமிழக மக்கள்தான் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.









 

விவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவு

விவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா
மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவு

 
சென்னை :கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு விவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் இன்று அமைச்சர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழகத்தில் நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடியினை மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (6.6.2014) எனது தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், இரா.வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நடப்பாண்டில், இதுவரை பெய்ய வேண்டிய மழை அளவான 161.8 மில்லி மீட்டருக்குப் பதிலாக 174.2 மில்லி மீட்டர் மழை கூடுதலாகப் பெறப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கியது போல், இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும். நீர் ஆதாரங்களிலிருந்து வயலுக்கு நீர் வீணாகாமல் கொண்டு செல்ல உதவும் வகையில், ஒவ்வொருவருக்கும் 600 அடி எச்.டி.பி.இ. குழாய்கள் 7000 விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

டெல்டா பகுதிகளில் காவேரி நீர் பெறப்படும் போது, வாய்க்கால் பாசனம் மூலம் அதிக அளவு நெல் சாகுபடி மேற்கொள்ளும் பொருட்டு, 100 விழுக்காடு மானியத்தில் சமுதாய நாற்றங்கால் முன்னரே அமைத்து, வாய்க்கால்களில் நீர் பெறப்படும் சமயத்தில் நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நெல் நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டெல்டா பகுதிகளில் 100 விழுக்காடு மானியத்தில் நெல் நடவு இயந்திரங்களை 200 விவசாயிகள் குழுக்களுக்கு வழங்கி, நடவுப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். வேலையாட்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளதால், குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள பகுதிகளில் சரியான தருணத் தில் களையெடுத்து, உயர் மகசூல் பெற வழிவகை செய்யும் வகையில், 100 விழுக்காடு மானியத்தில் இயந்திரக் களையெடுக்கும் கருவிகள் 200 விவசாயக் குழுக்களுக்கு வழங்கப்படும்.

குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ள பகுதிகளில் உயரிய தொழில் நுட்பங்கள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், உயர் மகசூல் தரும் இடுபொருட்களான நெல் நுண்ணூட்டக் கலவை, துத்தநாக சல்பேட் ஆகியவை தலா 1 லட்சம் ஏக்கர் பரப்பிளவிற்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

உயிர் உரங்கள் மற்றும் திரவ உயிர் உரங்கள் தலா 50,000 ஏக்கர் பரப்பளவிற்கு 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.  இதே போன்று, 60,000 ஏக்கர் பரப்பளவிற்கு ஜிப்சம் 100 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும்.

மேற்காணும் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு 32 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகளினால், டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் மூலம் விவசாயிகள் கூடுதல் பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளவும், உயர் மகசூல் பெறவும் வழிவகை ஏற்படும்’’என்று கூறியுள்ளார்

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கோரிக்கை கடிதம்



பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கோரிக்கை கடிதம்

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமார் உயிருக்கு ஆபத்து என அச்சம் எழுந்துள்ளது.

இந்திய பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் தலையிட்டால்தான்  பாதிரியாரை மீட்க முடியும்.  ஆப்கானிஸ்தான் விரைந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கு: முதல்வர் ஜெயலலிதா, மனு தள்ளுபடி

சொத்துக்குவிப்பு வழக்கு: முதல்வர் ஜெயலலிதா, மனு தள்ளுபடி

சொத்துக்குவிப்பு வழக்கிற்கு தடைகோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ளதால், தற்போது தடை கோருவது சரியாக இருக்காது எனக்கூறி நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.


 

மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி: கன்னியாகுமரி, தர்மபுரி, மாவட்ட அதிமுக செயலாளர்கள் நீக்கம்!

மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி: கன்னியாகுமரி, தர்மபுரி, மாவட்ட அதிமுக செயலாளர்கள் நீக்கம்!

மக்களவை  தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்த தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளர்கள் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளர் பி. அன்பழகன் நீக்கப்பட்டு, அவருக்குப்பதிலாக அமைச்சர் பி. பழனியப்பன் அப்பொறுப்பை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான் தங்கம் நீக்கப்பட்டு,  அவருக்குப்பதிலாக தமிழ்மகன் உசேன் அப்பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிவசெல்வராஜன் நீக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரமணா நீக்கப்பட்டு, அவருக்குப்பதிலாக மாதாவரம் மூர்த்தி அப்பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.

மேலும் இங்கு தேர்தலின்போது  ரமணா மீது சில புகார்கள் வந்ததாலேயே இந்த நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.

அதேப்போன்று புதுச்சேரியிலும் அதிமுக தோல்வியடைந்ததால், புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகனும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக புருஷோத்தமன் அப்பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
English summary

admk dharmapuri and kanyakumari party leaders dismissed

37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக. எம்.பி.க்களும் நாளை ஜெயலலிதாவுடன் சந்திப்பு!


37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக. எம்.பி.க்களும் நாளை ஜெயலலிதாவுடன் சந்திப்பு!

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 37 அதிமுக. எம்.பி.க்களும் நாளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெறுகின்றனர்.

மேலும் இவர்கள் அனைவரும் இன்று இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து நாளை காலை அதிமுக. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை சந்தித்து, தாங்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து ஆசி பெறுகின்றனர்.

அதன் பின்னர் 37 எம்.பி.க்களும் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு : தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!


முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு : தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய லெக்ஸ் நிறுவனம், சொத்து குவிப்பு வழக்குக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

மேலும் மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் வழங்கப்பட்டு இருக்கிறது: முதல்வர் ஜெயலலிதா

 

உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் வழங்கப்பட்டு இருக்கிறது: முதல்வர் ஜெயலலிதா

முல்லைப் பெரியாறு அணை வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மூலம் தமிழகத்திற்கு நியாயம் வழங்கப்பட்டு இருக்கிறது என்றும், தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட்டு இருக்கிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

 காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததில் வெற்றி; நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்ததில் வெற்றி என்ற வரிசையில்; இன்று முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நியாயம் வழங்கப்பட்டு இருக்கிறது; தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்பட்டு இருக்கிறது என்ற இனிப்பான வெற்றிச் செய்தி என்னை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, எனது ஆட்சிக் காலத்தில், தமிழக அரசின் சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வலுவான வாதங்களையடுத்து, தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையின் அன்றைய நீர்மட்டமான 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடிக்கு நீரை தேக்கி வைத்து கொள்ளலாம் எனவும்; அணையினை பலப்படுத்தும் பணியினை மேற்கொள்ளலாம் எனவும்; இப்பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசிற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் 27.2.2006 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பலப்படுத்தும் பணிகள் மத்திய நீர்வளக் குழுமத்தினர் கூறியபடி முடிக்கப்பட்ட உடன், தனிப்பட்ட நிபுணர்கள்

மேற்கொண்டு ஆய்வு நடத்தி, அணையின் நீர்மட்டத்தை உச்சமட்ட நீரளவான 152 அடிக்கு உயர்த்துவது குறித்து முடிவு செய்வார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புரை வழங்கியது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில், 2006-ல், 2003 ஆம் ஆண்டைய கேரள நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள பாதுகாப்பு சட்டத்தில் கேரள அரசு திருத்தங்களை கொண்டு வந்தது. இந்தத் திருத்தச் சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உச்சமட்ட நீர் அளவு 136 அடி என நிர்ணயம் செய்யப்பட்டது. கேரள அரசின் இந்தச் சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்திற்கு முரணானது; இந்தச் சட்டம் செல்லத்தக்கதல்ல என உத்தரவிடக் கோரி 31.3.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், தமிழக அரசின் வாதங்களையும், கேரள அரசின் வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7.5.2014 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்"" என்பதற்கேற்ப அமைந்துள்ளது.


இந்த தீர்ப்பில் தமிழ்நாட்டின் உரிமை மற்றும் எனது தலைமையிலான அரசு எடுத்த முடிவுகள் அனைத்தும் நிலைநாட்டப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பில் தமிழ்நாடு தாக்கல் செய்த சிவில் வழக்கு தீர்ப்பாணை ஆக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின், கேரள பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு, பிப்ரவரி 2006-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரையில் உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பிற்கு கேரள அரசு குறுக்கீடு ஏதும் செய்யக் கூடாது என்றும்; அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டவாறு தமிழ்நாடு அரசு பராமரிப்பு பணி மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரள அரசின் அச்சங்களில் உண்மை ஏதுமில்லை என்றாலும், மத்திய நீர்வளக் குழுமம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அணையின் நீர்மட்டத்தை 142 அடி அளவுக்கு உயர்த்தப்படுவதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் வாயிலாக தென் தமிழக மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் நிலைநாட்டப்பட்டு உள்ளது. வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும், அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் தமிழக மக்களை சேரும் என்று தெரிவித்து, வரலாற்று சிறப்பு மிகுந்த இந்த வெற்றியை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
 

 

சேலம், நாமக்கல் தொகுதிகளில் மறுவாக்குப்பதிவுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு


சேலம், நாமக்கல் தொகுதிகளில் மறுவாக்குப்பதிவுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

சேலம், நாமக்கல் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஒரு வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடை பெறுகிறது. வாக்குப்பதிவின்போது எந்திரக்கோளாறு காரணமாக மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கு அதிமுக., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மறுவாக்குப்பதிவை எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத் திற்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

12 நாட்களுக்கு பிறகு மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது ஆச்சரியத்தை தருகிறது.

மேலும் எந்தவொரு தேர்தல் புகாரும் வராத நிலையில் மறுவாக்குப்பதிவிற்கு உத்தரவிட்டது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary

salem namakkal districts revoting jaya slams ec decision

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா  3 நாள் பிரச்சாரம் செய்யும் இடங்கள்

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா 3 நாள் பிரச்சாரம் செய்யும் இடங்கள்

அதிமுக., தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வருகின்ற 24-ந்தேதி அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அதிமுக. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான  ஜெயலலிதா, கடந்த 3.3.2014 முதல் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத் திட்டத்தில் சில மாறுதல்கள் செய்யப் பட்டுள்ளது.

சென்னையில் 19, 20, 21-ந்தேதிகளில் 3 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற் கொள்கிறார். அவர் செல்லும் இடங்கள் வருமாறு:-

19-ந்தேதி ஆலந்தூர்

போயஸ் கார்டன், கோட்டூர்புரம், மீனம்பாக்கம், ஏ.எம்.ஜெயின் காலேஜ் சுரங்கப் பாதை,        
1. எம்.ஜி.ஆர். சிலை அருகில் (நங்கநல்லூர்), (பேசும் இடம்), 4-வது பிரதான சாலை       
2. ஆலந்தூர் தாலுகா அலுவலகம் (பழவந்தாங்கல்), (பேசும் இடம்), தில்லை கங்கா நகர்       
3.  ஆலந்தூர் நீதிமன்றம் அருகில்    (பேசும் இடம்)
 
19-ந்தேதி மத்திய சென்னை

கிண்டி, அசோக் பில்லர், எம்.எம்.டி.ஏ. காலனி மெயின் ரோடு       
4. ரசாக் கார்டன் சந்திப்பு    (பேசும் இடம்), பூவிருந்தவல்லி சாலை, நியூ ஆவடி சாலை, அயனாவரம் சாலை, கெல்லீஸ் பாலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை மேம்பாலம், சூளை நெடுஞ்சாலை       
5. சூளை தபால் நிலையம் (பேசும் இடம்) சைடன் ஆம்ஸ் சாலை, யானை கவுனி பாலம்
6. வால்டாக்ஸ் சாலை சந்திப்பு    (பேசும் இடம்), பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, சென்ட்ரல்,  அண்ணா சிலை, வாலாஜா சாலை
7. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பு (பேசும் இடம்), நடேசன் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, போயஸ் கார்டன்,
   
20-ந்தேதி வடசென்னை

போயஸ் கார்டன், ராயபுரம் மேம்பாலம்,  எண்ணூர் நெடுஞ்சாலை   
1. திருவொற்றியூர் தேரடி    (பேசும் இடம்) டோல்கேட், தண்டையார் பேட்டை,  எண்ணூர் நெடுஞ்சாலை   
2.     மணலி நெடுஞ்சாலை சந்திப்பு    (பேசும் இடம்), கிருஷ்ணமூர்த்தி இணைப்புச் சாலை,
3. சத்தியமூர்த்தி நகர், (பேசும் இடம்), எம்.கே.பி.நகர், மத்திய நிழற் சாலை,  எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, மூர்த்திங்கர் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை
4. பெரவள்ளூர் சந்திப்பு    (பேசும் இடம்), பெரம்பூர் நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, போயஸ் கார்டன்

21-ந்தேதி தென் சென்னை

போயஸ் கார்டன், காந்தி சிலை,  சாந்தோம் நெடுஞ்சாலை, எல்.பி.ரோடு   
1. கந்தன்சாவடி காளியம் மன் கோயில் பஸ் ஸ்டாப் (பெருங்குடி), (பேசும் இடம்), டைடல் பார்க், வேளச்சேரி ரோடு, பனகல் மாளிகை
2. ஐந்து விளக்கு (பேசும் இடம்) ஜோன்ஸ் ரோடு, கே.கே. நகர்       
3. எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் (100 அடி ரோடு) (பேசும் இடம்) உதயம் தியேட்டர், அரங்கநாதன் சுரங்கப் பாலம்,  நியூ போக் ரோடு, முத்துரங்கன் சாலை       
4. தியாகராயநகர் பேருந்து நிலையம்     (பேசும் இடம்) தேவர் சிலை, டி.டி.கே. சாலை, போயஸ் கார்டன்.
இவ்வாறு தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

English summary

election campaign schedule of jayalalitha

பக்கம் 1 / 6

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?