Dinaithal - தினஇதழ்

தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை எதிர்க்கும்  வழக்கை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப் பெற வேண்டும். : ராமதாஸ் வேண்டுகோள்!

தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை எதிர்க்கும்  வழக்கை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப் பெற வேண்டும்.: ராமதாஸ் வேண்டுகோள்!

பாமக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"வணிக நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள், இப்போது தமிழ் கட்டாயப் பாட சட்டத்திற்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி, அதை செயல்படுத்தாமல் இருக்க ஆணையிடக் கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கின்றன. இது நியாயமற்றது.

தமிழ் கட்டாயப் பாடச் சட்டம் 8 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், "நாங்கள் இதுவரை தமிழை கற்பிக்கவில்லை; எனவே அடுத்த ஆண்டில் 10ஆம் வகுப்புக்கு தமிழைக் கட்டாயப் பாடமாக்கக் கூடாது" என்று எதிர்ப்பது சரியா? என தனியார் பள்ளிகள் சிந்திக்க வேண்டும்.

தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது சிறுபான்மை பள்ளிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பறிக்கும் செயலாகும் என்று தனியார் பள்ளிகள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதத்தை ஏற்க முடியாது.
 
இச்சட்டத்தை எதிர்த்து மலையாள சமாஜம், கன்னியாகுமரி மாவட்ட நாயர் சேவை சங்கம் ஆகியவற்றின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 18.02.2008 அன்று தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், "அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்கவில்லை. உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்பிக்க மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல" என கண்டனம் தெரிவித்தது.

இதற்கெல்லாம் மேலாக ஒரு மாநிலத்தின் மொழியை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும், செழுமைப்படுத்த வேண்டிய கடமையும் அந்த மாநிலத்திலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது. அதுமட்டுமின்றி, தமிழை கட்டாயப் பாடமாக்கி கற்பிப்பதால் கல்வித் தரம் எந்த வகையிலும் குறையாது.

மாறாக திருக்குறள் கற்றுத்தரும் அறம் மற்றும் பொருளும், ஆத்திச்சூடி கற்பிக்கும் நன்னெறியும், புறநானூறு பயிற்றுவிக்கும் வீரமும் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் வாழ வழி செய்யும்.

எனவே, தமிழை புறந்தள்ளி விட்டு, ஆங்கில வழிக் கல்வியையும், அயல்மொழிப் பாடங்களையும் கற்றுத் தருவது தான் உயர்வான கல்வி என்ற மாயையை மீண்டும் மீண்டும் கட்டி எழுப்புவதை விடுத்து, அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்றுத் தர தனியார் பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். அதன் அடையாளமாக தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப் பெற வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
 

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு: தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது: ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு: தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது: ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு

பாமக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.05.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில்,

‘‘முந்தைய தி.மு.க. ஆட்சியினரால் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும்’’என்று அறிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி,‘‘ நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்’’என செய்யாத சாதனைக்காக தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், ‘‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு’’ என்ற பழமொழியை விட விரைவாக இரண்டு நாட்களிலேயே தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது. ஜூன் மாதத்தின் முதல் இரு நாட்கள் மட்டும் மின்வெட்டு மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஜூன் 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மின்வெட்டு தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது. சென்னை தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் 4 முதல் 6 மணி நேரம்  அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

100 டிகிரிக்கும் அதிகமாக கோடை வெயில் கொளுத்தும் வேளையில் இந்த மின்வெட்டால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் உற்பத்தி தடை பட்டிருக்கிறது. கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், உயர்வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வகப் பணிகளும் மின்வெட்டால்  முடங்கியுள்ளன.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மின்வெட்டு போக்கப்படும் என்று தான் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அதன்பின் பத்துக்கும் மேற்பட்ட முறை இதே வாக்குறுதியை மீண்டும் மீண்டும் கூறிய போதிலும், மின்வெட்டு அதிகரித்ததே தவிர குறையவில்லை. இப்போது காற்றாலைகள் மின்னுற்பத்தியைத் தொடங்கியிருப்பதால் அதைக் கொண்டு நிலைமையை சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில், தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது என அறிவித்ததுடன், அதை தமது சாதனையாகவும் காட்ட முதலமைச்சர் முயற்சி செய்திருக்கிறார். அதிலும், 3 ஆண்டுகளில் மின்வெட்டைப் போக்குவதாக அவர் உறுதியளித்திருந்ததைப் போலவும், அதை இப்போது செய்து காட்டியதன் மூலம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். மின்வெட்டு எப்போது நீங்கும் என்பது தொடர்பாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பலமுறை வாய்தா வாங்கியதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் இப்படி ஓர் அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் மின்வெட்டைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் உண்மை. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது மத்திய அரசின் மின் திட்டங்களையும் சேர்த்து தமிழகத்தின் நிறுவு திறன் 10,364 மெகாவாட்டாகவும், உற்பத்தி 8000 மெகாவாட்டாகவும் இருந்தது. அதன்பின் முந்தைய தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின்திட்டங்களும், கூட்டு முயற்சி மின்திட்டங்களும் நிறைவடைந்ததால் நிறுவுதிறன் 12,814 மெகாவாட் ஆகவும், உற்பத்தி 10,300 மெகாவாட் ஆகவும் அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் மின்தேவை 14,000 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. சுமார் 3700 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை நிலவும் நிலையில், அதை காற்றாலை மின்சாரத்தைக் கொண்டு சமாளித்துவிடலாம் என்று நினைப்பது மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க முயல்வதற்கு ஒப்பாகும். நிலையாக மின்சாரம் வழங்கும் அனல் மின் நிலையங்களை அமைப்பதன் மூலம் தான் மின்வெட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஆனால், அதை செய்ய தமிழக அரசு தவறியதால் தான் மின்வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தமிழகத்தின் மின்தேவை 2015 ஆம் ஆண்டில் 15,120 மெகாவாட் ஆகவும், 2016ல்16,400 மெகாவாட் ஆகவும், 2017ல் 17,750 மெகாவாட் ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், தமிழகத்தில் இதுவரை புதிய மின்திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாததாலும், தற்போது ஒப்பந்தம் வழங்கப்படவுள்ள 3300 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி மற்றும் எண்ணூர் அனல் மின்திட்டப் பணிகள் 2017 ஆம் ஆண்டு வரை நிறைவடையாது என்பதாலும், அதுவரை மின்வெட்டு அதிகரிக்குமே தவிர குறையாது.

எனவே, தவறான தகவல்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதற்கு முயலாமல், மின்வெட்டைப் போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் ஒருகட்டமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள மின்திட்டங்களை விரைவாக, அதாவது 30 மாதங்களில், நிறைவேற்றி முடித்து  மின்வெட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண தமிழக அரசு முயல வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


 

கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட  தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் தங்கி, போரால் பாதிக்கப்பட்ட  மக்களின் நலனுக்காக சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வந்த தமிழகத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்த நல்லுள்ளம் படைத்த பாதிரியாரை அங்குள்ள தலிபான் தீவிரவாதிகள் கடத்தியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை அடுத்த வாரியன்வாயல் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார் இளம் வயதிலேயே சமுதாயப்பணிகளுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். கொடைக்கானலில்  இறையியல் படிப்பை முடித்த அவர், ரோம் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஜேசு சபை அகதிகள் சேவை மையத்தில் இணைந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அச்சபையின் கிளை அலுவலக இயக்குனராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அவர், கொடைக்கானல் மலையிலுள்ள பழங்குடியின மக்கள் மற்றும் இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தமிழர்களின் நலனுக்காக பாடுபட்டார்.

அதன்பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்காக ஜேசு சபை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார். ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரையொட்டிய  பகுதிகளில் பள்ளிகளை அமைத்து குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல், வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார்.

 அதுமட்டுமின்றி, குழந்தைகள் தீவிரவாத இயக்கங்களில் சேருவதை பிரேம்குமார் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தலிபான் தீவிரவாதிகள் கடந்த 2ஆம் தேதி துப்பாக்கி முனையில் அவரைக் கடத்திச் சென்று விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாதிரியாரைக் கடத்திய தீவிரவாத கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் அவரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.

பாதிரியார் பிரேம்குமார் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர், அவரது கிராம மக்கள், அவரால் பயனடைந்த மழைவாழ் மக்கள் மற்றும் அகதிகள் என ஒட்டுமொத்த தமிழகமும் பதற்றத்துடனும், துடிதுடிப்புடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
 
எனவே, பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், மத்திய அரசும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பாதிரியார்  பிரேம்குமாரை பத்திரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.

என்.எல்.சி. விபத்து; தொழில்நுட்ப வல்லுனர் விசாரணை தேவை: ராமதாஸ் வேண்டுகோள்!

என்.எல்.சி. விபத்து; தொழில்நுட்ப வல்லுனர் விசாரணை தேவை: ராமதாஸ் வேண்டுகோள்!

என்.எல்.சி. அனல் மின்நிலைய விபத்து குறித்து தொழில் நுட்ப வல்லுனர் விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்

''நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தில் இன்று காலை கொதிகலன் குழாய் அதிக அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியதில் அங்கு பணியாற்றிய முதன்மை மேலாளர் செல்வராஜ் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ர்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் அனல்மின் நிலைய பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அபிஷேக், ஜோதி, பலராமன், ஒப்பந்தக்காரர் சிவலிங்கம் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தியும் அதிர்ச்சியளித்தது. கொதிகலன் குழாய் வெடித்த வேகத்தில் மின்நிலையத்தின் ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இந்த விபத்துக்கு பராமரிப்புப் பணிகளில் அலட்சியம் காட்டப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

விபத்து நடந்த 50 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்திப் பிரிவு 1962 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் அந்த மின் உற்பத்திப் பிரிவின் ஆயுள் காலம் கடந்த 2012 ஆண்டே முடிவடைந்து விட்டது. அதற்குப் பிறகும் அந்த மின் உற்பத்தி நிலையத்தைக் கைவிடாமல் தொடர்ந்து இயக்கி வந்ததன் விளைவாகவே இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்துக்கு என்.எல்.சி. நிர்வாகம்தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இந்த விபத்துக் குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நிர்வாகத்தின் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டு மேலாளர் உயிரிழந்திருப்பதும், அப்பாவி ஊழியர்கள் படுகாயமடைந்திருப்பதும் மிகுந்த வருத்தமளிக்கிறது. விபத்தில் காயமடைந்த பணியாளர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரும் விரைவாக நலம் பெற என் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்த மேலாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் அனைத்து சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

English summary

nlc accident technical team should investigate

ஈழத் தமிழ் அகதிகளை இன்டர்போல் கைது செய்ய அனுமதிக்க கூடாது: ராமதாஸ்

ஈழத் தமிழ் அகதிகளை இன்டர்போல் கைது செய்ய அனுமதிக்க கூடாது: ராமதாஸ்

ஈழத் தமிழ் அகதிகளை இன்டர்போல் கைது செய்ய அனுமதிக்கக் கூடாது என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''இலங்கையில் சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துள்ள நிலையில், உயிர் பிழைப்பதற்காக கடந்த 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்திற்கு வந்த ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட 10 அகதிகளை தமிழக காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். மனித உரிமையை மீறிய இந்நடவடிக்கையையே அப்போதே நான் கண்டித்திருந்தேன்.

இதைத்தொடர்ந்து தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்ட அகதிகளில் கதிர்வேலு தயாபரராஜா, உதயகலா ஆகிய இருவரையும் சர்வதேச காவல் துறையான இன்டர்போல் உதவியுடன் கைது செய்ய இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்கள் இருவரும் இலங்கை யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் பண மோசடி செய்திருப்பதாகவும், அதற்காகவே அவர்களை இன்டர்போல் உதவியுடன் இலங்கை அரசு கைது செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பி வந்த அப்பாவி அகதிகளை நிரூபிக்கப்படாத புகாரின் அடிப்படையில் துரத்தி, துரத்தி கைது செய்ய சிங்கள அரசு துடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி கொடூரமான முறையில் கொன்றொழித்துவிட்டு அதற்கான சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள மறுக்கும் ராஜபக்சே, நிரூபிக்கப்படாத பொருளாதார குற்றச்சாற்றுக்காக அகதிகளாக வந்த இருவரை சர்வதேச காவல் துறையை பயன்படுத்தி கைது செய்ய முயல்வது முரண்பாட்டின் உச்சம் ஆகும். இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் தவிர மீதமுள்ள தமிழர்களையும் ஏதேனும் ஒரு வகையில் சித்திரவதை செய்வது அல்லது படுகொலை செய்வதுதான் ராஜபக்சேவின் நோக்கமாகும். அதன் ஒருகட்டமாகத்தான் அகதிகளை சர்வதேச காவல் துறை மூலமாக கைது செய்ய இலங்கை முயல்கிறது.

இலங்கையின் இந்த சதிக்கு இந்தியா துணை போனால், அடுத்தகட்டமாக உரிமைகளுக்காக போராடி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று கொடுமைகளுக்குள்ளாக்க ராஜபக்சே அரசு முயலும். 1951 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அகதிகளின் அந்தஸ்து தொடர்பான ஒப்பந்தத்தில், 'அகதிகள் எனப்படுபவர்கள் எல்லா சூழல்களிலும் அகதிகளாகவே கருதப்படுவார்கள்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு நாட்டில் இன அடிப்படையிலோ, மத அடிப்படையிலோ ஒருவரின் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ அச்சுறுத்தல் ஏற்படுமென்றால், அந்த நாட்டிற்கு எந்த காலகட்டத்திலும் அவர் தஞ்சம் புகுந்துள்ள நாட்டின் அரசு திருப்பி அனுப்பக்கூடாது என்று இந்த ஒப்பந்தத்தின் 33 ஆவது பிரிவில் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல், ஒரு நாட்டில் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து இருப்பதாக தெரிந்தால் அவரை அந்த நாட்டிற்கு அனுப்பக் கூடாது சித்திரவதைக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தின் 3 ஆவது பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழ் அகதிகள் எவரேனும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால், அவர்களை இலங்கை அரசு தலைவாழை இலை போட்டு உபசரிக்காது; கடுமையான சித்திரவதைக்குத் தான் உள்ளாக்கும் என்பது உலகமறிந்த ரகசியம் ஆகும். ஈழத்தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு மவுனசாட்சியாக இருக்கும் இந்திய அரசுக்கு இந்த உண்மை இன்னும் நன்றாகவே தெரிந்திருக்கும்.

எனவே, தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களை சர்வதேச காவல் துறை மூலம் நாடு கடத்த முயலும் இலங்கையின் திட்டத்திற்கு இந்தியா ஒருபோதும் துணை போகக்கூடாது. தமிழகத்திலுள்ள அகதிகளை அவர்களின் விருப்பமில்லாமல் அவர்களின் நாட்டிற்கு அனுப்ப சம்மதிக்க மாட்டோம் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்டுள்ள 10 ஈழத்தமிழ் அகதிகளையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார


 

தமிழை பயிற்று மொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும்:  ராமதாஸ் கோரிக்கை

தமிழை பயிற்று மொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

தமிழை பயிற்று மொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பாமக. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''கர்நாடகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கன்னடத்தை கட்டாய பயிற்று மொழியாக அறிவித்து அம்மாநில அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தாய்மொழி கல்விக்கு ஆதரவான எண்ணம் கொண்ட அனைவருக்கும் இத்தீர்ப்பு பேரதிர்ச்சி அளித்தது.

எனினும், தாய்மொழி வழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்கும் கர்நாடக அரசு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்யவிருக்கும் கர்நாடக அரசு, அதில் நீதி கிடைக்கவில்லை என்றால், கன்னடத்தை கட்டாய பயிற்று மொழியாக்க சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மற்ற மாநில முதலமைச்சர்களுடன் இது குறித்து விவாதிப்பதுடன், தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திலும் வலியுறுத்தப் போவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியுள்ளார். மேலும், தாய்மொழி வழிக்கல்வியை கட்டாயமாக்கி அரசியல் சட்டத்தை திருத்தும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். கர்நாடக அரசின் இம்முடிவுக்கு அங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

தாய்மொழி வழிக் கல்விக்காக கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் உண்மையாகவே பாராட்டத்தக்கவை. அதேநேரத்தில் தமிழகத்தின் நிலைமையோ தலைகீழாக உள்ளது. தமிழ்நாட்டை கடந்த 47 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தமிழ்வழிக் கல்வியை திட்டமிட்டு அழித்து வருகின்றன. 1975 ஆம் ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மதுரை பல்கலைக் கழகத்திற்குட்பட்ட சில பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் இருந்த பதின்நிலை (மெட்ரிக்) கல்வி முறையை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி கல்வியை வணிக மயமாக்கியதுடன், ஆங்கில வழிக் கல்வி தான் சாலச் சிறந்தது என்ற நச்சு எண்ணத்தை தமிழ்நாட்டு மக்கள் மனதில் ஆழமாக விதைத்த பாவம் இரு திராவிடக் கட்சிகளின் அரசுகளைத் தான் சாரும்.

தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்கக் கோரி கடந்த 30 ஆண்டுகளாக தமிழறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் பல்வேறு போராட்டங்களை நடத்திய போதிலும், தமிழால் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக, ஆங்கிலப் பள்ளிகளுக்கு போட்டியாக அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை தொடங்குவதில் தான் முந்தைய தி.மு.க. அரசும், இப்போதைய அ.தி.மு.க. அரசும் போட்டி போடுகின்றன. ஒரு காலில் கட்டி ஏற்பட்டால் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதே சரியான தீர்வாக இருக்கும். மாறாக, ஒரு காலில் ஏற்பட்ட கட்டியைப் போலவே, இன்னொரு காலிலும் கட்டியை உருவாக்குவது எப்படிப்பட்டதாக இருக்குமோ, அதேபோல் தான் மெட்ரிக் பள்ளிகளை ஒழிப்பதை விடுத்து, அதற்கு போட்டியாக அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்குவதும் அமையும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கர்நாடகம், கேரளம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் மொழி, கல்வி தொடர்பான விஷயங்களில் அந்தந்த மாநிலங்களின் எழுத்தாளர்கள், மொழி அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோரைக் கொண்ட அமைப்புகள் தான் அரசுக்கு வழி காட்டுகின்றன. ஆனால், தமிழகத்தில் அத்தகைய அமைப்புகள் இல்லாததும், இருக்கும் தமிழறிஞர்கள் அரசியல் ரீதியாக பிரிந்து கிடப்பதும் நல்வாய்ப்புக் கேடானதாகும்.

ஆங்கில வழிக் கல்வி கவர்ச்சிகரமானதாக இருக்கலாம்; ஆனால், தமிழ் வழிக் கல்விதான் அறிவார்ந்ததாகவும், சிந்தனைத் திறனை தூண்டுவதாகவும் இருக்கும். எனவே, தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழக சட்டப்பேரவையில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றுவதுடன், அதற்கு அரசியல் சட்ட பாதுகாப்பையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மொழி, கல்வி பற்றிய விஷயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்க தமிழறிஞர்கள், கல்வியாளர்களைக் கொண்ட சுதந்திரமாக செயல்படும் அமைப்பையும் தமிழக அரசு உருவாக்கி ஊக்குவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

 

தமிழக உரிமைக்கு கிடைத்த வெற்றி - முல்லைப் பெரியாறு வழக்கின் தீர்ப்பு:ராமதாஸ் அறிக்கை!


தமிழக உரிமைக்கு கிடைத்த வெற்றி -
முல்லைப் பெரியாறு வழக்கின் தீர்ப்பு:ராமதாஸ் அறிக்கை!

பாமக. நிறுவனர் மருத்துவர் ராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்றும், இதற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. சற்று தாமதமாக கிடைத்த நீதி என்றாலும், தமிழகத்தின் உரிமைகளை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமை யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். ஆனால், திராவிடக் கட்சிகளின் அலட்சியத்தால் முல்லைப்பெரியாற்றில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை இழந்தோம். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கான தீர்ப்பு கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே பெறப்பட்டது. அப்போது அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால், அப்போதே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியிருந்தால் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்போதிருந்த தமிழக அரசு அதை செய்யாமல் கோட்டை விட்டதால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு சட்டம் நிறைவேற்றி நமது உரிமையைப் பறித்தது.

கேரள அரசின் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டு ஒரு புறம் சட்டப் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்னொரு புறம் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்ந்தது. இப்பிரச்சினையில் மக்களுக்கு ஆதரவாக பா.ம.க.வும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. முல்லைப்பெரியாற்று உரிமையை பாதுகாப்பதற்காக 2006 ஆம் ஆண்டு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கூடலூரில் எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தியது. அதன்பின் 2011 ஆம் ஆண்டு இறுதியில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு எதிராக கம்பம் பகுதி விவசாயிகள் தன்னெழுச்சியாக போராடியபோதும் அவர்களுக்கு பா.ம.க துணை நின்றது. இத்தகைய சூழலில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தென்மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.


வளம் கொழிக்கும் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இதுவரை ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டால் அப்பகுதியில் எந்த பிரச்சினையும் இல்லாமல்  இரு போக சாகுபடியும், சில இடங்களில் முப்போக சாகுபடியும் செய்ய முடியும். மேலும், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் அதிக தண்ணீர் கிடைக்கும். அதுமட்டுமின்றி,  முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணையை கேரள அரசு கட்டக்கூடாது என்றும், இப்போதுள்ள அணையை பராமரிக்கும் பொறுப்பு தமிழகத்திடமே இருக்கும் என்றும், இதற்கு கேரள அரசு ஒத்துழைக்கிறதா? என்பதை கண்காணிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் தலைமையில் மூவர் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் தமிழகத்திற்கு மிகவும் சாதகமானதாகும்.


அதேநேரத்தில், முல்லைப்பெரியாறு பிரச்சினையை வைத்து அரசியல் லாபம் தேட முயலும் கேரள அரசியல்வாதிகள் இந்த தீர்ப்புக்கு தடை வாங்க முயற்சிப்பார்கள் என்பதால், தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு அந்த முயற்சிகளை முறியடிக்க வேண்டும். அணையின் நீர்மட்டம் தற்போது 111 அடியாக இருக்கும் நிலையில், தற்போது பெய்து வரும் மழையையும், கோடைக்காலத்தில் பெய்யும் மழையையும் பயன்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பின் 2006 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டபிறகு அணையின் நீர்மட்டத்தை அதன் முழுகொள்ளவான 152 அடியாக உயர்த்த வேண்டும். அதேநேரத்தில் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து இரு மாநில மக்களுக்கு இடையிலான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தமிழக, கேரள  அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

English summary

ramadoss om mullaiperiyar case

கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ்: 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்


கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ்: 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25% இடங்களை நிரப்புவதற்கான நடைமுறை இன்று தொடங்குகிறது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தனியார் பள்ளிகள் இன்னும் மேற்கொள்ளாததால் இந்த ஆண்டும் இத்திட்டம் பெயரளவிலேயே செயல்படுத்தப்படும் என்றும், இதன் பயன்கள் ஏழைக் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்காது என்றுமே தோன்றுகிறது.

6 முதல் 14 வயது வரையுடைய அனைத்து குழந்தைகளும் இலவசக் கட்டாயக் கல்வியைப் பெற வேண்டும் என்ற மிகச் சிறந்த நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது தான் கல்வி பெறும் உரிமைச் சட்டம். இச்சட்டத்தின்படி மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி, சீருடை, புத்தகம் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும். தொடக்கக் கல்வியை வழங்குவதில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விதம் மிகவும் கவலையளிக்கிறது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில்,  தனியார் பள்ளிகள் மூலம் குறைந்தது 2 லட்சம் குழந்தைகளாவது இலவசக் கல்வி பெற்றிருக்க வேண்டும். ஆனால், 2000 பேர் கூட பயன் பெறவில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் இச்சட்டத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை. பிரபலமான பல தனியார் பள்ளிகள் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இடங்களை பணக்கார மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொண்டு நிரப்புவதுடன், அவர்கள் அனைவரையும் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்தவர்களாக கணக்குக் காட்டி இந்த சட்டத்தைக் கேலிக் கூத்தாக்குகின்றன. இத்தனை முறைகேடுகளுக்கு பிறகும், தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதி இடங்கள் கூட நிரப்பப்படுவதில்லை என்பதை தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையே ஒப்புக்கொண்டிருக்கிறது.

பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் மெட்ரிகுலேஷன் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2013&14 ஆம் ஆண்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் நிரப்பப்படவேண்டிய 58,619 இடங்களில் 23,248 இடங்கள், அதாவது வெறும் 40% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 3550 தனியார் பள்ளிகளில் சுமார் 1000 பள்ளிகளில் ஓரிடம் கூட ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது. ஆனால், இந்த பள்ளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்தே, இவ்விஷயத்தில் தமிழகஅரசு எந்த அளவுக்கு அலட்சியமாகவும், பொறுப்பில்லாமலும் செயல்பட்டிருக்கிறது என்பதை உணர முடியும்.

2014&15 ஆம் ஆண்டிலாவது இத்தகைய முறைகேடுகள் நடக்காதபடி தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் எத்தனை இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் வெளியிடப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கான கெடு முடிந்து ஒரு மாதமாகியும் இதுவரை எந்த பள்ளியும் அந்த விவரங்களை வெளியிடவில்லை; அதற்கான நடவடிக்கையை தமிழக அரசும் எடுக்கவில்லை. இதனால் இந்த ஆண்டும் கல்வி பெறும் உரிமை காணல் நீராகி விடுமோ என்ற ஐயம் எழுகிறது.

கடந்த 2010 ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங்,‘‘ நான் மண்ணெண்ணெய் விளக்கின் மங்கிய  வெளிச்சத்தில் படித்தவன். நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் கல்வி தான். ஒவ்வொரு மாணவ, மாணவியும் இந்த சட்டத்தை பயன்படுத்தி கல்வியின் உச்சத்தை எட்ட வேண்டும்’’ என்று கூறினார். ஆனால், இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் விதத்தைப் பார்க்கும்போது ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி எட்டாக்கனியாகவே நீடிக்கும் போலிருக்கிறது.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற தத்துவத்தின்படி இந்த ஆண்டாவது இலவசக் கட்டாயக் கல்வி பெறும் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் இந்த சட்டத்தின்படி ஒதுக்கப்பட்டுள்ள 25% இடங்களுக்கான ஏழை மாணவர்களை தமிழக அரசே பள்ளிக் கல்வித்துறை மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு தனியார் பள்ளிகள் மூலம் கல்வி வழங்க கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

English summary

govt should ensure to get 25% seats in right to education act

மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு துணிச்சல் வேண்டும்!: ராமதாஸ்மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு துணிச்சல் வேண்டும்!: ராமதாஸ்

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு காட்டியதைவிட அதிக துணிச்சலை தமிழக அரசு காட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 "கேரள மக்களின் மன ஓட்டத்தை நன்றாக புரிந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி, மாநிலத்தில் உள்ள 752 மதுக் கடைகளில் 418 மதுக்கடைகளை அதிரடியாக மூட வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, மதுப் பழக்கத்தை படிப்படியாக குறைக்கவும், அடுத்த 10 ஆண்டுகளில் கேரளத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

கேரள மக்களையும், மதுவையும் பிரிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு அம்மாநிலத்தில் மது நுகர்வு அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே தனிநபர் மது நுகர்வு விகிதத்தில் முதலிடம் வகிப்பது  கேரளாதான். அதுமட்டுமின்றி, கேரள அரசியலையே ஆட்டிப்படைக்கும் சக்தி மது தயாரிப்பு நிறுவனங்களுக்கு உண்டு. கேரளத்தில் மதுவுக்கு ஆதரவாக இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும்,  அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தாய்மார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதற்காக முதல்வர் உம்மன்சாண்டிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் தமிழகத்தின் நிலையை நினைத்தால் வேதனையும், வருத்தமும் தான் விஞ்சுகிறது. மதுவால் தமிழகம் எதிர்கொண்ட சீரழிவுகள் ஏராளம். வாங்கிய ஊதியத்தை கணவன் மதுக்கடையில் குடித்து அழித்து விட்டு வந்ததால் குழந்தைகளுடன் பட்டினியாக உறங்கும் தாய்மார்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. சாலை விபத்துக்களின் எண்ணிக்கையில் முதலிடம், சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் முதலிடம், குடியால் இறந்த கணவர்களால் உருவான இளம் விதவைகளின் எண்ணிக்கையில் முதலிடம் என எத்தனையோ அவமானச் சின்னங்களை தமிழகம் சுமந்து கொண்டிருந்தாலும், அதைப் பற்றியெல்லாம்  கவலைப்படாமல் இலக்கு வைத்து மது விற்பனை செய்வதில் தான் தமிழக ஆட்சியாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர். மது வருமானத்தில்தான் இலவசத் திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வாக்குகளை வாங்க முடியும் என்ற கீழ்த்தரமான எண்ணம் இதற்கு ஒரு காரணமென்றால், அ.தி.மு.க. ஆண்டாலும், தி.மு.க. ஆண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களே மது ஆலைகளை நடத்தி கோடிக்கணக்கில் லாபம் பார்க்கத் துடிப்பது இன்னொரு காரணம் ஆகும்.

கேரள அரசுக்கு கடந்த ஆண்டு வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.35,542 கோடி. இதில் மது விற்பனை மூலம் கிடைத்த வருவாய் மட்டும் ரூ.9300 கோடி. அதாவது நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகம். மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் கடும் நிதி நெருக்கடி ஏற்படும் எனத் தெரிந்தும், முழுமையான மதுவிலக்கின் முதல் கட்டமாக குடிப்பகங்களை கேரள அரசு மூடியிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ கடந்த ஆண்டு கிடைத்த ரூ. 23,401 கோடி வருவாய் போதாதென்று, நடப்பாண்டில் ரூ.26,292 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்து தெருக்கள் தோறும் கடைகளைத் திறந்து மது விற்பனை செய்து வருகிறது. மக்கள் நலனில் இரு மாநில அரசுகளுக்குமான வித்தியாசம் இதுதான்.

மது விற்று, மக்களை சீரழிப்பதன் மூலம் வருவாய் ஈட்டுவது மன்னிக்க முடியாத பாவம் என்பதை தமிழக அரசு இப்போதாவது  உணர்ந்து கொள்ள வேண்டும். மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு காட்டியதைவிட அதிக துணிச்சலை தமிழக அரசு காட்ட வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதங்களில் முழுமையான மது விலக்கு ஏற்படுத்தப்படும் என்பதை கொள்கை முடிவாக அறிவித்து, மாதத்திற்கு 20 விழுக்காடு கடைகள் வீதம்  மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

English summary

tn government should have guts to stop selling alcohol

மீண்டும் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு; ஜெயலலிதாவின் உண்மை முகம் அம்பலம்: ராமதாஸ் குற்றசாட்டு

மீண்டும் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு; ஜெயலலிதாவின் உண்மை முகம் அம்பலம்: ராமதாஸ் குற்றசாட்டு

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது ஜெயலலிதாவின் உண்மை முகத்தை அம்பலமாக்கியுள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக செயற்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் வெட்டு மீண்டும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது.

அனைத்து மாவட்டங்களிலும் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு செயல்படுத்தப்படுகிறது. மின்வெட்டிலிருந்து தற்காலிகமாக விலக்களிக்கப்பட்டிருந்த சென்னை நகரிலும் கடந்த இரு நாட்களாக 3 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவதாகக் கூறி 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அடுத்த 3 மாதங்களில் மின்வெட்டு சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். அதன்பின் 3 மாதங்களுக்கு ஒருமுறை வீதம் இதுவரை 11 முறை மின்வெட்டு விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என கூறி வந்தார். ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் எழுதிய எழுத்துக்களாக கலைந்து போக, மின்வெட்டு மட்டும் நிரந்தரமாக நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் 110 டிகிரி கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் புழுக்கத்தில் வெந்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, விசைத்தறியில் தொடங்கி பெரும் தொழிற்சாலைகள் வரை அனைத்து மட்டங்களிலும் கடுமையான உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தவிக்கின்றனர்.

ஆனால், ஜெயலலிதா மின்வெட்டை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், முந்தைய ஆட்சியையும், மத்திய அரசையும் குறை கூறிக் கொண்டு கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். மின்வெட்டை போக்குவதற்கான யோசனைகளை பட்டியலிட்டு கடந்த 3 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளேன்; பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அ.தி.மு.க. அரசு இவற்றில் எந்த யோசனையையும் செயல்படுத்தவில்லை.

திட்டமிட்டு செயல்படுத்தினால் எந்த ஒரு மின்திட்டத்தையும் 30 மாதங்களில் நிறைவேற்ற முடியும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது 12,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மின் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அவற்றை அரசு முழு வீச்சில் செயல்படுத்தி இருந்தால் தமிழகம் இன்று உண்மையாகவே மின் மிகை மாநிலமாகியிருக்கும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஒரே ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கட்டுமான பணிகள் கூட தொடங்கப்பட வில்லை. எண்ணூரில் 660 மெகாவாட் மின் திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு, ஓராண்டுக்கு பிறகு தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. 2,640 மெகாவாட் திறன் கொண்ட மேலும் இரு திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு 9 மாதங்களாகியும் இதுவரை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.

இதனால், அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய முடியாது என்பது தான் உண்மை நிலை. ஆனால், முதல்வரோ 99%  மின்வெட்டு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் தமிழகம் மின் மிகை மாநிலமாகும் என்றும் கூறி ஏமாற்றி வருகிறார். இவையெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகளைப் பெற திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகங்கள் என்பதை வாக்குப்பதிவு முடிந்ததற்கு அடுத்த நாளே மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்தே மக்கள் புரிந்து கொண்டிருப்பர்.

மின்வெட்டைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜெயலலிதா, 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்த ஆயத்தமாகிவிட்டார். தமிழ்நாடு மின் வாரியத்தின் இழப்பு ரூ.75,000 கோடியாக அதிகரித்து விட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சிக்கு  வந்தபோது மின் வாரியத்தின் இழப்பு ரூ.40,375 கோடியாக இருந்தது. இதை ஈடுகட்டுவதற்காகத் தான் ரூ.7,874 கோடிக்கு மின் கட்டண உயர்வை ஜெயலலிதா அறிவித்தார். இதற்குப்பிறகும் 3 ஆண்டுகளில் மின்வாரியத்தின் இழப்பு இப்போது ரூ.75,000 கோடியாக உயர்ந்திருக்கிறது என்றால் ஜெயலலிதா ஆட்சியின் நிர்வாகத்திறன் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தவறியது, தட்டுப்பாட்டைப் போக்க தனியாரிடமிருந்து அதிக விலையில் மின்சாரத்தை வாங்குவது, மின்சாரக் கொள்முதலில் ஊழல் தலைவிரித்தாடுவது ஆகியவையே மின் வாரியத்தின் இழப்பு அதிகரித்ததற்கு காரணமாகும். இதையெல்லாம் புரிந்துகொள்ளாத ஜெயலலிதா, மின் பற்றாக்குறைக்குத் தீர்வு மின்வெட்டு, இழப்பை ஈடுசெய்ய கட்டண உயர்வு என்ற எண்ணத்தில் செயல்படுகிறார். அதிலும், தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் வரை காத்திருந்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு இவற்றை செய்ய முயலுவதன் மூலம் ஜெயலலிதா அவரது உண்மை முகத்தை காட்டி விட்டார். இவ்வாறு செய்வதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.

எனவே, மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட்டு, மின்வெட்டை போக்குவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். மாறாக மக்களிடம் வாக்குகளை பெற்றாகிவிட்டது என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டால், அவருக்கு மக்கள் சரியான பதிலடி தரத் தயங்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

English summary

after elections we can see the real face of jayalalitha :ramadoss
 

பக்கம் 1 / 6

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?